பவள மல்லி

Written by Selvi on 8:29 PM


மானுவின் தந்தை முருகேசன் கால்காசானாலும் அரசாங்க உத்தியோகத்தில் இருந்தார். ஆனாலும் நடுத்தரமான குடும்பம்தான். மானு அவளது தம்பி மணி இருவரையும் அரசு பள்ளியிலேயே சேர்த்திருந்தனர். இருவரும் குடும்ப சூழ்நிலையை நன்கு உணர்ந்து படித்தனர். லெட்சுமி அவ்வளவு கட்டுக்கோப்பாக பிள்ளைகளை வளர்த்திருந்தாள். அந்த விதத்தில் அவளுக்கு சற்று பெருமை உண்டு.

மானுவுக்கு தன் சிறு வயதிலிருந்து வித விதமான பூக்களை வளர்க்க வேண்டும் என்ற ஆர்வம் இருந்தது. அதிலும் குறிப்பாக பவள மல்லி என்றால் அவளுக்கு தனிப் பிரியம். அதன் ஐந்து இதழ்களும் பவளத்தையொத்த அதன் காம்புகளும் அதன் சுகந்த மணத்திலும் தன்னையே மறந்து விடுவாள்.

பாரதியாரை போன்று இவளும் சக்தியிடம் வேண்டினாள் காணி நிலம் வேண்டி. அதில் தங்களுக்கென்று சிறு வீடு கட்டிக் கொண்டு வீட்டை சுற்றிலும் பூச்செடிகளை வளர்க்க வேண்டுமென்று நினைத்தாள். அவள் அம்மா லெட்சுமியிடம் அடிக்கடி கேட்பாள் "ஏம்மா நாம எப்ப வீடு வாங்குவோம் ?" அதற்கு லெட்சுமி "சீக்கிரமே வீடு வாங்குவோம்டி கண்ணு" என்பாள். மானு,"போம்மா நீ எப்ப கேட்டாலும் இப்படியே தான் சொல்லி ஏமாத்தற" என்று கோவித்து கொண்டு முகத்தை தூக்கி வைத்துக் கொண்டு திண்ணையில் சென்று அமர்ந்தாள்.

லெட்சுமி "வீடு என்ன திருவிழாக் கடையில் விக்கிற பொம்மையா? இவள் கேட்டதும் இருபது ரூபாய் கொடுத்து வாங்கி கொடுக்க" என்று மனதுக்குள் நினைத்தாள். முருகேசன் அலுவலகத்தில் போட்ட ஜி.பி.எப் லோன் மற்றும் லெட்சுமியின் சேமிப்பினைக் கொண்டு ஊருக்கு ஒதுக்குப் புறமாக ஐந்து சென்ட் இடத்தை வாங்கினார்.

அதற்குள்ளாக மானு அந்த இடத்தில் வீடு கட்டியது போலவும், வீட்டைச் சுற்றிலும் பூக்கள் வளர்ப்பது போலவும், குறிப்பாக வீட்டின் எதிரே பவள மல்லியை நட்டு அது பூத்து குலுங்குவதாகவும் கனவு கண்டாள். தனது கனவு என்றேனும் ஒரு நாள் பலிக்கும் என நம்பினாள்.

காலங்கள் உருண்டோடியது. மானுவின் திருமணத்திற்காக அந்த இடத்தை விற்க நினைத்தார் முருகேசன். ஆனால் மானு பிடிவாதமாக மறுத்து விட்டாள். ஒருவழியாக பணத்தை புரட்டி மானுவின் திருமணத்தை முடித்து விட்டார். மணியும் தனது படிப்பை முடித்து நல்ல வேலையில் சேர்ந்தான். இரண்டு ஆண்டுகளில் கையில் இருந்த சேமிப்பின் மூலம் மானுவின் கனவு நிறைவேறியது. பவள மல்லியும் பூத்து குலுங்கியது. ஆனால் அங்கிருந்து அதனை கண்டு ரசிக்க முடியாமல் மானு புகுந்த வீட்டில் வாழ்க்கை நடத்திக் கொண்டிருந்தாள்.




Related Posts by Categories



Widget by Hoctro | Jack Book
  1. 0 comments: Responses to “ பவள மல்லி ”

Affliate sites/Links: Free Wallpapers, Tamil Novels Review, Chennai-Tourism, Addbus.com, dmegs.com, linksmarket.net, webtechvision, internetgecko, Million Product Store Hub Pages, free4u, google sites, searchsight, Google Directory, link-backnet, tagfetcher, searchsight, top-of-blogs, technorati, dmoz.org