Oct 3, 2008

மூன்று முடிச்சு

அம்முவுக்கு திருமண ஏற்பாடுகள் நடந்து கொண்டிருந்தது. இன்னும் ஒரு மாதத்தில் திருமணம். மாப்பிள்ளைக்கு தனியார் நிறுவனத்தில் வேலை. ஒரே பையன். எந்த பிக்கல் பிடுங்கலும் இல்லை. சம்பந்திக்கு நல்ல குணம் "உங்க பெண்ணுக்கு நீங்க இஷ்டப் பட்டதை செய்யுங்க" என்று கூறி விட்டார்.

திருமண நாள் நெருங்கிக் கொண்டிருந்தது. சொந்தக் காரர்கள் அனைவரும் ஒரு வாரத்திற்கு முன்பே வந்திருந்ததால் வீடே கல கலத்தது. அம்மு தன் பெற்றோர்களையும் உடன் பிறந்தவர்களையும் எப்படி பிரிந்து செல்லப் போகிறோம் என்று கவலை கொண்டாள். அவள் அம்மா தமயந்தி " கவலைப் படதே அம்மு. எங்கப் போகப் போற? இதோ இருக்கிற டவுன்லதான. நினைச்சா நாங்க வந்து பார்த்துக்கப் போறோம் " என்று ஆறுதல் கூறினாள். அவள் தம்பி ராமுவோ "அக்கா நீ எங்களை எல்லாம் மறந்துட மாட்டீயே" என்று கேட்டான். அம்மு தன் அம்மாவிடம், "அம்மா எனக்கு கல்யாணமே வேண்டாம். நாம எல்லாம் இப்படி ஒன்னாவே இருந்துரலாம் " என்று கூறினாள்.

திருமணம் நல்ல படியாக முடிந்து அம்மு புகுந்த வீடு சென்றாள். ஒரு வாரத்திற்குப் பிறகு மாப்பிள்ளையும் பெண்ணும் மறு வீடு வந்தனர். அம்மு ஆளே மாறிப் போய் விட்டாள். அவள் அம்மாவிடம் "ஏம்மா! சாம்பார் வைக்கும் முன்ன என்னை கேட்டிருக்கக் கூடாதா? அவங்களுக்கு முள்ளன்கியே புடிக்காது. இது என்ன பாயசத்தில் இனிப்பே இல்ல. அவங்களுக்கு இனிப்பு சற்று தூக்கலா இருக்கணும். தயிர் பச்சடி வேணாம் வெண்டக்கா பச்சடி வை" என்று அதிகாரம் செய்தாள். மேலும் நாங்க சாயங்காலமே கிளம்பனும். அங்க என் அத்தை தனியா இருக்காங்க என்று கூறினாள்.

ராமு அக்கா அம்முவை அதிசயமாக பார்த்தான். இது தாண்டா பொண்ணுங்க குணம். அவங்க கழுத்தில மூணு முடிச்சு ஏறியதும் புருஷனும் புகுந்த வீடும் தான் முக்கியம். நாம எல்லாம் இரண்டாம் பட்சம் தான். இப்படிதன் பொண்ணு இருக்கிறது தான் ஒவ்வொரு தாய்க்கும் பெருமை.

No comments: