Oct 8, 2008

சுமை தாங்கி

மாலதிக்கு இருபத்தி ஆறு வயதாகின்றது. அவளுடன் படித்தவர்கள் அனைவருக்கும் திருமணமாகி ஆசைக்கு ஒன்று என்றும் சிலர் ஆஸ்திக்கு ஒன்று என்று குழந்தை குட்டிகளுடன் குடும்பம் நடத்திக் கொண்டிருந்தனர். அவளுக்கு அவர்களைப் பார்க்கும் போதெல்லாம் ஏக்கமாக இருக்கும். அதனால் அவர்களைப் பார்ப்பதை தவிர்ப்பாள்.

அவளது அப்பா குண சேகரன் அரசாங்க வேலையில் இருக்கும் போதே மாரடைப்பில் இறந்து விட்டார். பட்டப் படிப்பை முடித்திருந்த மாலதிக்கு அந்த வேலை கிடைத்தது. கூடவே குடும்ப பொறுப்பும் அவளது தலையில் விழுந்தது.
தனது மற்ற குழந்தைகளின் எதிர்காலமே மாலதியை நம்பி இருப்பதால் அவளது திருமணத்தைப் பற்றியே அம்மா சிவகாமி பேச்சு எடுக்கமாட்டாள். யாரும் கேட்டாலும் "இப்ப என்ன அவசரம்? மாலதி ஒரு சின்ன குழந்தை. இன்னும் கொஞ்ச நாள் போகட்டும் " என்று கூறி விடுவாள்.

மாலதிக்கு அலுவலகத்தில் இருக்கும் எட்டு மணி நேரமும் சொர்க்கத்தில் இருப்பது போல் தோன்றும். காரணம் அவளுடன் வேலை பார்க்கும் கணேசன்.
கணேசனும் மாலதியும் ஒருவரையொருவர் விரும்பினார்கள். கணேசனுக்கு பெற்றோர்கள் இல்லை. தூரத்து உறவினரான அவனது அத்தை ஒருத்தி தான் அவனை எடுத்து வளர்த்தாள். அவளும் கடந்த ஓராண்டுக்கு முன்பு தான் இறந்து போனாள். இருவரும் வழக்கம் போல் அலுவலகம் முடிந்ததும் அருகிலிருந்த பார்க்கில் சந்தித்தனர்.
"இன்னும் எவ்வளவு நாள் தான் கல்யாணத்தை தள்ளிப் போடப் போற? சீக்கிரம் உங்க வீட்லப் பேசி ஒரு முடிவு சொல்லு" என்றான் கணேசன். மாலதி பதிலேதும் பேசாமல் மௌனமாய் இருந்தாள்.
வீட்டுக்குள் நுழையும் போது சிவகாமியிடம் பக்கத்து வீட்டு மாமி "இன்னும் எத்தனை நாளைக்கு மாலதிய ஆத்துலேயே வைச்சுக்கிட்டு இருப்பாய்? அவளுக்கும் ஒரு கல்யாணத்தை பண்ணி புக்காத்துக்கு அனுப்ப வேண்டாமோ? என்று கேட்டாள்.
சிவகாமி "அதை நினைச்சா தான் மாமி எனக்கும் மாமி கவலையா இருக்கு. சிவா படிச்சு முடிச்சு ஒரு நல்ல வேலையில் சேர்ந்துட்டா இவளுக்கு கல்யாணம் பண்ணிடலாமுன்னு நினைச்சுகிட்டு இருக்கிறேன்" என்றாள்.
இதைக் கேட்ட மாலதி அம்மா இன்னும் மூன்று வருடத்திற்கு திருமண பேச்சே எடுக்க மாட்டாள். இவளிடம் எப்படி கணேசனைப் பற்றி கூறுவது என்று யோசித்தாள். வேறு வழி இல்லை. இன்று எப்படியும் சொல்லி விட வேண்டியது தான் என்ற முடிவுடன் தான் தன்னுடன் வேலை பார்க்கும் கணேசனை விரும்புவதாக கூறினாள்.
சிவகாமி "உங்க அப்பா இருந்திருந்தா நீ இப்படி எல்லாம் பேசுவியா? இப்படி என்ன தவிக்க விட்டுட்டு போயிட்டாரே. குடும்பமே உன்ன நம்பி இருக்குன்ற திமிர்டி நாம என்ன செஞ்சாலும் யார் கேட்பாங்கன்ற தைரியம். அதான் இப்படியெல்லாம் பேசுற" என்று அழுது ஆர்ப்பாட்டம் செய்தாள்.
மாலதி "அவன் யார்? நல்லவனா கெட்டவனா? என்ன ஜாதி? இப்படியெல்லாம் கேட்டிருந்தால் கூட நான் சந்தோஷப் பட்டிருப்பேன். ஆனா நீ எங்கே நான் கல்யாணம் செஞ்சுட்டு போய்ட்டேனா வருமானம் போயிருமேன்னு கவலைப் படறே". ச்சே! நீயெல்லாம் ஒரு அம்மாவா? இப்ப சொல்றேன் கேட்டுக்கோ. நான் கல்யாணம் செஞ்சப்புறமும் என் தம்பி, தங்கையை நல்லபடியா படிக்க வைச்சு உன்னையும் கடைசி வரை பாத்துக்குவேன். என்று கூறினாள்.

No comments: