Nov 4, 2008

நிறங்கள் பலவிதம்

நகரில் மிகப் பெரிய பள்ளியில் ஆறாம் வகுப்பு படித்து வந்தான் கண்ணன். அவனது தந்தை சோம சுந்தரம் பிரபலமான வழக்கறிஞர். தாய் கல்யாணி அன்பே உருவானவள். அவனை அதட்டி கூட பேச மாட்டாள். ஒரே பையனான கண்ணனும் படிப்பில் படு சுட்டி. அதி புத்திசாலி. இருந்தாலும் அவனிடம் உள்ள ஒரே கெட்ட குணம் நிறப் பாகுபாடு பார்ப்பது தான். பள்ளியிலும், உறவுக்காரப் பிள்ளைகளிலும் கூட சிவப்பானவர்களையே தனது நண்பர்களாக்கிக் கொண்டான். சற்று கறுப்பாக இருப்பவர்களை வெறுத்தான். இவனை எப்படி திருத்துவது என்று கல்யாணி வருத்தம் கொண்டாள்.

ஒரு நாள் உறவினர் வீட்டு திருமணத்திற்காக சோம சுந்தரமும் கல்யாணியும் சென்றிருந்தனர். கண்ணனுக்கு தேர்வு சமயம். ஆகையால் அவனை வீட்டில் விட்டு விட்டு பாதுகாப்பிற்கு தாயம்மாவை அவனுடம் தங்குமாறு கேட்டிருந்தனர். கண்ணன் தேர்வு முடிந்ததும் தன் பள்ளி நண்பர்களை வீட்டிற்கு அழைத்து வந்தான். நண்பர்களுடன் சேர்ந்து ஆட்டம் போட்டான். தாயம்மா, "தம்பி அம்மா அப்பா இல்லாத நேரத்தில் இப்படி எல்லாம் செய்யக் கூடாது. இதெல்லாம் தப்பு" என்றாள். கண்ணனோ "போ! போ! எல்லாம் எனக்குத் தெரியும். பெரிசா சொல்ல வந்துட்டா ஆளைப் பாரு நல்ல தார் டின்னாட்டம் " என்று கூறினான். கண்ணன் தன் நண்பர்களிடம் 'எங்க அப்பா போன வாரம் புதுப் பட டி.வி.டி வாங்கிட்டு வந்தார். வாங்கடா நாம் மாடிக்குச் சென்று பார்ப்போம் " என்று அனைவரையும் அழைத்துச் சென்றான். டி.வி. ஐ ஆன் செய்ய முயன்ற பொது மின் கசிவின் காரணமாக கண்ணனுக்கு ஷாக் அடித்து ஆ என அலறிக் கொண்டு கீழே விழுந்தான். தலையில் ஏற்பட்ட பலத்த காயம் காரணமாக ரத்தம் அதிகமாக வெளியேறியது. நண்பர்கள் அனைவரும் செய்வதறியாமல் வெளியே ஓடி விட்டனர்.

சத்தம் கேட்டு ஓடி வந்த தாயம்மா கண்ணனை அவசர அவசரமாக தூக்கிக் கொண்டு பக்கத்திலிருந்த ஆஸ்பத்திரியில் சேர்த்தாள். அப்படியே சோம சுந்தரத்திற்கும் தகவல் தெரிவித்தாள். அதிக ரத்தம் வெளியேறியதால் ரத்தம் தேவைப் பட்டது. தாயம்மாவின் ரத்தப் பிரிவு கண்ணனது ரத்தப் பிரிவுட ஒத்துப் போனதால் அவளது ரத்தத்தை கண்ணனுக்கு செலுத்தினர். கண்ணனும் நடந்ததை அறிந்து தாயம்மாவிடம் தான் இவ்வளவு நாள் அவளை இழிவாக பேசியதற்கு வருத்தம் தெரிவித்து தன்னை காப்பாற்றியதற்காக நன்றி தெரிவித்தான். கண்ணன் வெளித் தோற்றத்தில் அனைவரும் வேறு நிறமாக இருந்தாலும் ரத்தத்தின் நிறம் ஒன்றே என்பதை உணர்ந்து கொண்டான். அதன் பின் அவன் அனைவரையும் ஒன்றாகவே கருதினான்.

No comments: